Home English Tamil
     
   
 
 பொலிஸ் பதிவு இடம் பெற்ற இடங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடி விஜயம்
 

ஊடக அறிக்கை

வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் இன்று (21.09.2008) பொலிஸ் பதிவு செய்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தையும் ஒத்துழைப்பையும் வடக்கு விஷேட செயலணிக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பெரிதும் பாராட்டியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அவசரமும் அவசியமுமாக கருதப்படும் இத்தகைய செயற்பாடுகள் எமது மக்களின் நாளைய பாதுகாப்பினை உறுதிப்படுத்துமென்றும் கூறினார். இன்றைய தினம் கொழும்பின் பல பகுதிகளிலும் நடைபெற்ற, மக்கள் தம்மைப் பதிவு செய்யும் இடங்களுக்கு நேரடியாக விஜயங்களை மேற்கொண்டு பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் மத்தியில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றும்போது:-

மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை பொலிஸாரும் மக்களுடன் நெருக்கமாக பழகுகின்ற வாய்ப்பையும் சுமுகமான உறவையும் இச்சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். எமது மக்களுக்கு பாதுகாப்புத் தொடர்பான அச்சங்கள் சந்தேகங்கள் என்பவற்றை நேரடியாக பொலிஸாரோடு தொடர்புகொண்டு  தீர்த்துக்கொள்ளுகின்ற வாய்ப்பாகவும் அமைந்திருக்கும் என நம்புகின்றேன் என்று கூறிய அமைச்சர்.

பொலிஸ் பதிவு என்றதும் ஒவ்வொரு கட்சியினரும் தத்தமது அரசியல் சுயலாப நோக்கத்தில் இருந்துகொண்டு பலவிதமான கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். அத்தகைய செயற்பாடுகள் எமது மக்களுக்கு எத்தகைய நன்மைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதை நடைமுறை ரீதியாக எமது மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். புலித்தலைமையின் பயங்கரவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இச்சூழலில் எமது மக்களைப் பாதுகாத்து அவர்கள் கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்துவதே ஈ.பி.டி.பி. ஆகிய எமது நோக்கமாகும். எனவேதான் பொலிஸ் பதிவுக்காக பொது இடங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதையும், அங்கு எமது மக்கள் கௌரவமாக அணுகப்பட வேண்டும் என்பதையும் அரசு மற்றும் பாதுகாப்புத் தரப்பிற்கு நாம் எடுத்து விளக்கியிருந்தோம்.

பல இடங்களிலும் பொலிஸ் பதிவுகள் செய்து கொண்ட எமது மக்கள் தாம் நெருக்கடியற்ற சூழலில் குறுகிய நேரத்துக்குள் பொலிஸ் பதிவுகளைச் செய்ததையும் பொலிஸார் தம்முடன் நட்போடு நடந்துகொண்டதையும் குறிப்பிட்டனர். தமிழ் மக்களைப் பலி கொடுக்கும் செயற்பாடுகளிலும், இனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்ற கைங்கரியங்களிலும் புலித்தலைமை திட்டமிட்டுச் செயலாற்றி வருகின்றனர். அத்தகைய ஆபத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும். என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.