Home English Tamil
     
   
 
 விரும்பிய இடங்களை நோக்கி இடம்பெயர்வதற்கு வன்னி மக்களுக்கு சுதந்திரம் வேண்டும்!
 
ஊடகங்களுக்கான அறிக்கை

சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்தல் என்பது துயரம் நிறைந்த நிகழ்வுதான்.
ஆனாலும் தமது சொந்த பாதுப்பின் நிமித்தம் எமது மக்கள் தாம் விரும்பிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் போது அதை தடுத்து நிறுத்துவது மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே கருதவேண்டும்!

வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி பாதுகாப்பு படையினர் நகர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் வேட்டோசைகளுக்கும், வெடிகுண்டு சத்தங்களுக்கும் மத்தியில் எமது மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அடுத்த கணம் என்ன நடக்குமோ தெரியாது என்ற ஏக்கத்தில் மட்டுமே ஒவ்வொரு கணங்களும் கழிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமது உயிர் வாழும் உரிமைக்காக பாதுகாப்பான ஒரு சூழலை தேடி இடம்பெயர வேண்டிய கட்டாயம் வன்னி மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
ஆனாலும் புலித்தலைமை தாமே விரும்பி தேடிக்கொண்ட அழிவு யுத்தத்திற்கு மனிதக்கேடயங்களாக எமது மக்களை பயன்படுத்தும் நோக்கில் அவர்களை தமது பலாத்காரப்பிடிக்குள் இருந்து நகர விடாது தடுத்து வருகின்றனர். இது பாரியதொரு மனித உரிமை மீறலாகும்.

தாம் எங்கு வாழ வேண்டும் என்பதும், எந்த சூழலில் வாழ்வது தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் என்பதும் மக்களின் சுயமான தீர்மானமாகும். எந்தவொரு படை நகர்விலும் சரி, படையினருக்கு எதிரான தாக்குதலிலும் சரி அப்பாவி பொதுமக்கள் சிக்குண்டு தவிப்பதும், அதில் அவலங்களை சுமப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று! உயிர் வாழும் சுதந்திரமும் அதற்காக விரும்பிய இடங்களை நோக்கி நடமாடும் சுதந்திரமும் எமது மக்களுக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்ச ஐனநாயக உரிமைகளாகும். இந்நிலையில் அப்பாவி மக்களை பாதுகாப்பான இடம் நோக்கி வருமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்திருக்கின்றது. இவைகளுக்கு தடையாக இருந்து கொண்டு, அப்பாவி மக்களை கொல்லக்கொடுத்து விட்டு, அதை பிரச்சாரப்படுத்தி, சுயலாப அரசியல் தேடும் புலித்லைமையின் முயற்சிகளுக்கு எந்தவொரு அப்பாவி குடிமகனும் பலியாகிவிட அனுமதிக்க முடியாது.

ஆகவே மனிதநேய அமைப்புக்களும், சர்வதேச சமூகமும், சர்வதேச, மற்றும் உள்ளூர் பொது அமைப்புகளும், மதத்தலைவர்களும் எமது மக்கள் தங்களது பாதுகாப்பை தேடி விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கான கோரிக்கையினை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான அழுத்தங்களை புலித்தலைமை மீது பிரயோகிக்க வேண்டும். இது எமது வன்னி மக்களுக்காக ஈ.பி.டி.பி விடுக்கும் மனிதாபிமான வேண்டுகோளாகும்.


ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.