23.07.2008
புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் புலிகளின் வரலாற்றில் இது போன்ற யுத்த நிறுத்தங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு வருவதும் இராணுவ ரீதியிலான தயாரிப்புக்களை மேற்கொள்வதற்காக சாதகமாக அக்கால கட்டத்தைப் புலிகள் பயன்படுத்தி வருவதும் யாவரும் நன்கறிந்த விடயமாகுமென்றும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் நேற்றைய தினம் (22.07.2008) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சு அலுவலகத்தில் வைத்து சந்தித்துக் கலைந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு கௌரவமானதும் நிலையானதுமான அரசியல் தீர்வு கிட்ட வேண்டும் என்றும் அதிகாரப் பரவலாக்களின் மூலமே அது சாத்தியப்படும் என்றும் தெரிவித்ததுடன் தனது கட்சி ஆரம்பம் தொட்டு முன்வைத்து வந்த நடைமுறைச் சாத்தியமான மூன்று கட்டங்களைக் கொண்ட அரசியல் தீர்வுத் திட்டத்தின் முதல் கட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் இது ஒரு நல்ல ஆரம்பம் என்றும் தெரிவித்தார்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றின் மூலம் மாகாணசபை செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இத்தேர்தல் குறித்து குறைபாடுகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் ஏதாவது ஓரிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற தேவையை முன்னிறுத்தியே இத்தேர்தலை நாம் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்றும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புலிகளுக்கு ஜனநாயக நடைமுறையில் வாழ முடியாதென்றும் புலித்தலைமையின் தேவை ஒரு துண்டு நிலம் என்றும் அதன் மூலமே அவர்களது பயங்கரவாத செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றனர் என்றும் சுட்டிக் காட்டினார்.
மேற்படி சந்திப்பின் போது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான இன்க் ஐரோமிர் கொலிக், ஜோலீனென், எடிட்பவர், ஜீன் லெம்பக்ட், ரொபர்ட்ஸ் ஈவென்ஸ், க்ளவுடியா ஸ்பென்டன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி ஈ.பி.டி.பி
|