21.09.2012 - வெள்ளிக்கிழமை
மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விரைவில் புதிய காணி சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரீ.அசோக பீரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (21) கிளிநொச்சி அரச செயலகத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் காணிப்பிரச்சினைகளை ஆராயும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு மண்ணின் மகிமை (பிம்சவிய) திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது. ஆனால் அது சிலரினால் நீதிமன்ற தடையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டுவிட்டது. இருப்பினும் மக்களின் நலன்களை கருதி அவர்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புதிய காணி சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட இருக்கின்றோம். இந்த சுற்றுநிருபம் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அது இறுதியாக்கப்படும் எனத்தெரிவித்தார்.
இதனைவிட பிரதேசங்கள் ரீதியாக காணி கச்சேரிகள் மற்றும் நடமாடும் சேவைகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் ஐப்பசி மாதம் 13 ஆம் திகதி கரைச்சி மற்றும் பூநகரி பிரதேசங்களுக்கான காணி கச்சேரிகள் நடத்துவதற்கும் எதிர்வரும் 12ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் காணி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வுகளை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ், அமைச்சின் மேலதிக செயலாளர் பொரலஸ், காணித்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ராஜபக்ஸ, கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு அரச அதிபர் வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் காணி உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




|