Home English Tamil
     
   
 
 பொன்னாலையில் காணியற்ற நிலையில்இருந்த மக்களுக்கு சொந்தமாகக் காணிகள் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் நடவடிக்கை
 

18.08.2012 - சனிக்கிழமை
 
யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் நீண்டகாலமாக காணியற்ற நிலையில் வாழ்ந்துவந்த 21 குடும்பங்களுடைய காணிப்பிரச்சினைக்கு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தீர்வு கண்டுள்ளார்.
 
இன்றையதினம் (18) காலை பொன்னாலை பாபுஜி முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இவ்வாறு தீர்வு காணப்பட்ட மக்களுக்கான காணி உரித்துப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது. காணியற்ற நிலையில் இருந்த மேற்படி குடும்பங்கள் மிக நீண்ட காலமாக பொருளாதார அப்படையிலும் பின்தங்கிய நிலையில், தனியாரின் காணிகளில் வாழ்ந்து வந்தனர். இதனால், காணி உரித்து இல்லை என்ற காரணத்தை முன்வைத்து இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வீட்டுத்திட்ட உதவிகளும் அரச அரச சார்பற்ற அமைப்புகளின் பிற உதவிகளும் கிடைக்கப் பெறாமல் இவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தனர்.
 
இந்த நிலைமையைக் கருத்திற் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களும் வலிமேற்குப் பிரதேச சபையின் உறுப்பினருமான பாலகிருஷ்ணனும் (ஜீவன்) குறித்த காணிஉரிமையாளரான கிருஷ்ணபிள்ளை பத்மநாதனுடன் கலந்துரையாடி மிகக் குறைந்த விலையில் தலா இரண்டு பரப்பு வீதம் குடியிருப்பதற்கான காணிகளைப் பெற்றுக் கொடுத்தனர். இவ்வாறு பெற்றுக்கொடுக்கப்பட்ட காணிகளுக்கான உரித்து ஆவணமே இன்று வழங்கப்பட்டது. இந்த உரித்தாவணத்தை பதிவு செய்து பெற்றுக்கொள்வதற்கான செலவினை சொண்ட் என்ற உள்ளுர் தொண்டர் நிறுவனத்தினர் பொறுப்பேற்றிருந்தனர்.
 
இன்று காணி உரித்து ஆவணத்தைப் பெற்றுக்கொண்ட மக்கள் இனி வருங்காலத்தில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் அனைத்து உதவித்திட்டங்களையும் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் தாம் முழுமையாக உதவுவதாக முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், பிரதேசசபை உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், நிறுவனப் பணிப்பாளர் சிந்துராஜா, அதன்திட்டப்பணிப்பாளர் குணாளசிங்கம், செல்வகுமார் முன்னாள் கிராம அலுவலர் சிறிறஞ்சன், கிராம அலுவலர் சர்வானந்தன், கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர், மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் குறித்த பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.