Home English Tamil
     
   
 
 அரசின் மொழிக்கொள்கை இனஒற்றுமைக்கு வழி!
 

07.08.2012 - செவ்வாய்க்கிழமை

அரசாங்கம் மேற்கொண்டு வரும் இருமொழி மற்றும் மும்மொழி திட்டத்தினால் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் மக்களுக்கு மொழிகளினால் இருந்து வரும் தடைகள் நீங்கி அனைத்து மக்களுக்கும் ஒருவரை ஒருவர் அவர்கள் பேசும் மொழியின் மூலம் நன்கு புரிந்துகொண்டு நல்லிணக்கப்பாட்டை வலுப்படுத்த முடியும் என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கப்பாட்டுக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உண்மையான இன ஒற்றுமையையும் நல்லிணக்கப்பாட்டையும் இனங்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு சகல இனத்தவர்களும் மற்றவர்களின் மொழிகளை நன்றாகப் புரிந்து பேசக் கூடிய திறமையைப் பெற்றிருக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவை நிறைவேற்றுவதே இதன் குறிக்கோளாகும்.

அமைச்சு தனது இருமொழி மற்றும் மும்மொழிக் கற்கைநெறியை ஒன்பது மாகாணங்களிலும் ஏற்படுத்தவுள்ள நிலையங்களின் ஊடாக வெற்றிகரமான முறையில் அமுலாக்குவதற்கு துரிதகதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் பெரும்பான்மையின மக்களுக்கு தமிழ் மொழியையும் தமிழ் மக்களுக்கு சிங்கள மொழியையும் கற்பிக்க வேண்டும் என்ற நல்லிணக்க ஆணைக்குழு செய்த சிபார்சினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இரு மொழி மற்றும் மும்மொழித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு பாடசாலைகளே சிறந்த அடித்தளமாக அமைகின்றன. ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் சிங்கள மாணவர்கள் தமிழையும் இதே பரீட்சைக்குத் தோற்றும் தமிழ் மாணவர்கள் சிங்களத்தையும் ஒரு பாடமாக கற்றுக் கொண்டு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வசதிகளை விரைவில் அரசாங்கப் பாடசாலைகளில் செய்து கொடுப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசாங்கப் பாடசாலைகளில் 5ம் தரம் வரையில் இந்த இரு மொழிக் கற்கை நெறிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தமிழ் மொழியும் சிங்கள மொழியும் ஒன்றுக்கொன்று நெருக்கமான சொற்பதங்களை கொண்டிருப்பதனால் அம்மொழிகளை தமிழ் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் இலகுவாகக் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று  கல்விமான்கள் கூறுகின்றார்கள்.

இவ்விரு மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கு கிராம மட்டத்திலும் நகர மட்டத்திலும் மொழி கற்கை நெறி அமைப்புகளை ஏற்படுத்தி அவற்றுக்கு இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை உள்வாங்கி அதன் மூலம் பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் மாலைநேர வகுப்புகளை தொண்டர் அடிப்படையில் நடத்துவது என்றும் அவை மூலம் வயது வந்தவர்களுக்கும் இந்த மொழி அறிவைக் கற்றுக் கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை கொண்டுள்ளார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.