06.08.2012 - திங்கட்கிழமை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், அவரது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடபகுதியின் அபிவிருத்திக்கென பெருந்தொகையான நிதியை அரசிடமிருந்து பெற்று யுத்தத்தால் அழிவடைந்த பிரதேசங்களை துரிதமாக புனரமைப்பு செய்து வருகின்றனர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (6) யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மீள்குடியேறிய தென்மராட்சி, வடமராட்சி கிழக்கு மக்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசினால் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடபகுதி மக்கள் முன்னர் இருந்ததனை விட தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த பிரதேசங்களில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட மக்களுக்கும் நஷ்ட ஈடுகளை வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், முன்னர் ஒரு காலத்தில் இந்த நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இடையே நல்ல உறவு இருந்தது நட்போடு வாழ்ந்தனர் அந்த உறவு மீண்டும் மலர வேண்டும் அதை நோக்கி நாம் அனைவரும் பயணிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
தென்மராட்சி எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் மீள்குடியேறிய 25 பயனாளிகளுக்கும், வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) பிரதேசத்தில் மீள்குடியேறிய 25 பயனாளிகளுக்கும் கூரைத்தகடுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இயற்கை அனர்த்தங்களின் போது இடம்பெயரும் மக்களுக்கு சமைத்த உணவை வழங்கக் கூடிய வகையிலான பாத்திரங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது,
இந்நிகழ்வில் யாழ்.மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலர்கள், ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு பிரதேச அமைப்பாளரும், நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளருமான தானியேல் றெக்சியன் (ரஜீவ்), ஈ.பி.டி.பியின் ஊர்காவற்துறை பிரதேச அமைப்பாளரும், ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளருமான மருதயினார் ஜெயகாந்தன் (காந்தன்) ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச அமைப்பாளரும், வேலணை பிரதேச சபை தவிசாளருமான சின்னையா சிவராசா (போல்), பிரதேச சபைச் செயலாளர்கள் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








|