|
| | தமது தேவைகள் கோரிக்கைகள் குறித்து யாழ். மாநகர பின்தங்கிய பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரியப்படுத்தினர். |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
யாழ். மாநகரசபைப் பிரதேசத்திற்குள் வதியும் பின்தங்கியுள்ள பிரதேச மக்களான கொட்டடி முத்தமிழ் சனசமூக நிலையப்பகுதி மக்களும் மீனாட்சிபுரம் பிரதேச மக்களும் தமது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுவந்தனர்.
தமது வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் தமது ஜீவனோபாய தொழிற்துறைகளை ஏற்படுத்தித் தரும்படி கொட்டடி முத்தமிழ் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்த அதேநேரம் இயலுமான சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு உதவி செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர். மற்றொருபுறம் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு மேலாக தாம் வசித்துவரும் தமது காணிகளுக்கு உறுதிகளை பெற்றுத்தரும்படி மீனாட்சிபுரம் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். காலாதிகாலமாக தாம் வசித்துவரும் இடத்தினை பல்வேறு முயற்சிகளின் நிமித்தம் கையகப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்த அம்மக்கள் அதனை தடுத்து நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.
இச்சந்திப்பின்போது யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ மாநகரசபை உறுப்பினர் கோமகன் ஆகியோரும் உடனிருந்ததுடன் தகுதிவாய்ந்த சட்டத்தரணியும் உடனிருந்து வருகை தந்திருந்த மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | பல்லாண்டு நிறைவு விழாக்களை காணும் யாழ். பொது அமைப்புக்கள் அதில் பங்குபற்றுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
யாழ்ப்பாணத்தில் சிறப்பாக செயற்பட்டுவரும் சனசமூக நிலையங்கள் பலவும் தமது ஆண்டு விழாக்களின் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக பங்குபற்றி சிறப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு யாழ். குருநகர் கிங்ஸ்கிரீன் சனசமூக நிலைய தலைவர் விஜயகாந்த் மற்றும் செயலாளர் குயின்ரஸ் ஆகியோர் தலைமையில் வருகைதந்த நிர்வாகப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் நாற்பத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவினைக் காணும் தமது அமைப்பின் ஆண்டுவிழாவில் பிரதம விருந்தினராக பங்குபற்றி சிறப்பிக்கும் வண்ணம் கேட்டுக்கொண்டனர். இதேவேளை இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு வருகை தந்திருந்த அரியாலை கலைமகள் சனசமூக நிலையத்தினரும் தமது நாற்பத்தியேழாவது ஆண்டு நிறைவு விழாக்களில் பிரதம விருந்தினராக பங்குகொள்ளும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைக் கேட்டுக்கொண்டனர். கலைமகள் சனசமூகநிலைய தலைவர் இ.மதிதரன் செயலாளர் கே.உதயசீலன் ஆகியோர் தலைமையில் வருகை தந்த நிர்வாகப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களுமே மேற்படி வேண்டுகோளை விடுத்தனர்.
மேற்படி வேண்டுகோள்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்றுக்கொண்ட அதேவேளை கடந்த காலங்களில் பொருளாகவும் நிதியுதவியாகவும் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு தமக்கு நல்கிய அனைத்து உதவிகளுக்கும் சனசமூக நிலைய அங்கத்தவர்கள் தமது நன்றிகளையும் தெரியப்படுத்திக்கொண்டனர். இச்சந்திப்புக்களின்போது யாழ். மாநகர பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | தென்பகுதி வாகனங்கள் யாழில் மோதின. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பஸ் மற்றும் சொகுசு கார் என்பன இன்று காலை நகர மத்தியில் விபத்திற்குள்ளாகின.
யாழ். மணிக்கூட்டுக் கோபுர வீதிச்சந்தியில் இன்று காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்துச் சம்பவத்தில் தென்பகுதியில் இருந்து சுற்றுலாப்பயணிகளை ஏற்றிவந்த டபிள்யு.பி.என்.ஏ3020 என்ற இலக்கமுடைய தனியார் பஸ்வண்டியானது தென் பகுதியில் இருந்து சுற்றுலாப்பயணமாக வந்த டபிள்யு.பி.ஜே.பீ. என்ற இலக்கமுடைய சொகுசு காரினை மோதித்தள்ளியது. இதில் காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தபோதும் பஸ்ஸில் சிறு சேதம்கூட ஏற்படவில்லை என்பதுடன் எவருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான விடயமாகும். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த யாழ். போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
|
|
|
| | நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
10 இலட்சம் ரூபா விஷேட கடனுதவி! |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
நெடுந்தீவு பகுதிக்கான இருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு 10 இலட்சம் ரூபா கடனுதவியை வழங்கினார்.
மேற்படி கூட்டுறவுச் சங்கத்தில் பொதுமக்களுக்கான நுகர்வுப் பொருட்கள் இல்லை என்றும் இதனால் அதிக விலை கொடுத்து தனியார் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முறைப்பாடு செய்ததையடுத்து இன்றைய தினம் (10) காலை கூட்டுறவுச் சங்கத்திற்குச் சென்ற அமைச்சர் அவர்கள் நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதுடன் கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய நிலையையும் கண்டறிந்தார்.
இதனையடுத்து மகேஸ்வரி நிதியத்தின் மூலம் 10 இலட்சம் ரூபா வட்டியில்லாக் கடனை வழங்கிய அமைச்சர் அவர்கள் இந்நிதியைக் கொண்டு நெடுந்தீவு பகுதி மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்து வழங்குமாறும் அதே நேரம் கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடுகளை விஸ்தரித்து அதனைப் பலப்படுத்திக் கொள்ளுமாறும் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளுக்குப் பணிப்புரை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
|
|
| | நெடுந்தீவிற்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது இருநாள் விஜயத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆய்வு! |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரு நாட்களுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் நெடுந்தீவு பகுதிக்குச் சென்றிருந்தார்.
யாழ் குடாநாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து அப்பகுதி மக்களினது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அவ்வப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தமைக்கு இணங்கவே அமைச்சர் அவர்களது இவ்விஜயம் அமைந்திருந்தது.
நேற்றைய தினமும் இன்றைய தினமும் நெடுந்தீவில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களுடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் அம்மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் நெடுந்தீவு பிரதேசமானது இன்றைய நிலையில் கடந்தகால அனர்த்தங்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து நிற்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.
இந்த நிலையில் குடிநீர் பாதைகள் செப்பனிடப்படாமை மின்சாரம் வீட்டு வசதிகள் மலசல கூடங்கள் கடல் மற்றும் தரைப் போக்குவரத்து போன்ற அடிப்படைத் தேவைகளில் குறைபாடுகள் நிலவுவதாகப் பொதுமக்கள் எடுத்துக் கூறியதையடுத்து வெகுவிரைவில் கட்டம் கட்டமாக இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள் அம்மக்களின் கடல் போக்குவரத்து வசதி கருதி இன்னுமொரு பாரிய படகினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இப்போதே தான் எடுத்துள்ளதாகவும் இன்னும் சில வாரங்களில் இப்படகு போக்குவரத்திற்காக விடப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன் தரைப் போக்குவரத்தில் ஈடுபடுத்த பெரியளவிலான பேரூந்து ஒன்றை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அப்பகுதி தொண்டர் ஆசிரியர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் விளையாட்டு கழகப் பிரதிநிதிகள் சமூகப் பெரியார்கள் போன்ற பலரையும் அமைச்சர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது நெடுந்தீவு பகுதியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளார். அமைச்சர் அவர்களது நெடுந்தீவுப் பயணத்தின் போது நெடுந்தீவு மகா வித்தியாலயம் மற்றும் சுப்பிரமணிய வித்தியாலய இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளிலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
|
|
| | கிராமத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். - ஜனாதிபதி தெரிவிப்பு. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
கிராமத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பெலிஅத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி கிராமத்தை அபிவிருத்தி செய்வதன் பொருட்டு அடிப்படை தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நாட்டு மக்களுக்கு தேவையான அபிவிருத்தியினை வழங்கும் பொருட்டு கடந்த பல வருடங்களாக தமது அரசாங்கம் அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களின் வாக்குகளை கருத்தில் கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு பாதகத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை தமது அரசாங்கம் மேற்கொண்டிருக்கவில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியதுடன் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்லும் இந்த பயணத்திற்கு சகல மக்களும் உதாரணமாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
|
|
|
| | யாழில் பொதுமக்கள் தொடர்பு நிலையம் ராணுவத்தளபதியினால் திறந்துவைப்பு. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுடனான தொடர்புகளை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை பாதையில் திறக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா இவ்வலுவலகத்தை திறந்து வைத்தார். மேற்படி அலுவலகம் வாரத்தின் ஏழு நாட்களும் இருபத்திநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் வகையில் அனைவருக்கும் பயனபடும் வகையில் இயங்கவுள்ளதாக இராணுவத் தளபதி அங்கு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். இதன்மூலம் குடா நாட்டு மக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்த்துவைக்கூடியதாக இருக்கும் என்பதுடன் குடா நாட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் அரசாங்கத்தின் நல்லிணக்க திட்டத்தின் கீழ் இவ்வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
|
|
|
| | 2004 பொதுத் தேர்தலில் ஒரு சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு நிதியுதவி. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நூற்றுக்கு ஒன்றுக்கு மேலதிகமான வாக்கு வீதத்தை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு உதவி தொகைகளை வழங்க தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக தீர்மானித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தின் தெரிவிக்கப்பட்டுள்ள பணிப்புரைக்கு அமைய இந்த உதவி தொகை வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் விசேட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் அந்த பெயருடனும் அதே சின்னத்துடனும் போட்டியிடும் சந்தர்ப்த்திலேயே இந்த உதவி தொகை கிடைக்கும். இதன்படி ஒரு வாக்குக்கு 50 சதம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் அனைத்து கட்சிகளும் இதற்காக விண்ணப்பிக்கவில்லை எனினும் தேர்தலுக்கு பின்னர் இந்த உதவி தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
| | அந்தமானில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கையர் கைது. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டடிருந்த மேலும் சில இலங்கையர்கள் நேற்று இந்திய கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தமான் தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஆறு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களது படகு ஒன்றும் கரையோர காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது வழங்கு தொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்தாம் திகதியும் இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்த ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | யாழ்ப்பாணத்தில் வீதிகள் விஸ்தரிக்கப்படவுள்ளன. |
|
| | 10.03.2010 - புதன்கிழமை
ஆமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ். குடாநாட்டின் பிரதான வீதிகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் எதிர்வரும் மே மாதம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்பொருட்டு நேற்றையதினம் யாழ்ப்பாண செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொது அமைப்புக்கள் திணைக்களத் தலைவர்கள் பொருளியலாளர்கள் மற்றும் பிரதேச செயலக தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் முதல் பணியாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
|
|
|
| | அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அனைத்து தமிழ் மக்களும் ஒன்றுபடவேண்டும். - ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளர். |
|
| | 09.03.2010 - செவ்வாய்க்கிழமை
நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் எமது செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அனைத்து தமிழ் மக்களும் சரியான மக்கள் மத்தியில் உள்ள தலைமைகளை இணங்கண்டு அவர்களை பலப்படுத்த வேண்டுமென ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
கைதடி பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் அப்பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த முப்பது வருட எதிர்ப்பு அரசியல் எமக்கு எதனையும் பெற்றுத்தரவில்லை என்பதுடன் அது எமது வளங்களை அழித்தொழித்து எமது மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு சென்று விட்டுள்ளதை உணர்த்தியதுடன் மீண்டும் தேசியம் சுயநிர்ணயம் எனக் கூறிக்கொண்டு எமது மக்களை மீண்டும் அழிவு யுகத்திற்கு கொண்டு செல்ல பலரும் முயற்ச்சிப்பதாக தெரிவித்தார்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒர் பொன்னான வாய்ப்பென்றும் அதனை எமது தழிழ் தலைமைகள் சரிவரப் பயன்படுத்த தவறிறுள்ளதை சுட்டிக்காட்டியதுடன் எதிர்வரும் காலங்களில் நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எமது அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான மக்கள் மத்தியில் இருந்து சேவை செய்யக் கூடிய தலைமைகளை பாராளுமன்ற செல்ல மக்கள் வழியனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் என அறிவிக்கப்பட்டதன் பிற்பாடு பல புதிய முகங்கள் மண்ணின் புதல்வர்கள் என்றும் வடக்கின் மைந்தர்கள் என்றும் கூறிக்கொண்டு தமிழ் மக்களுக்கான சரியான வழியினை காட்டுவதாக வெறும் வெற்றுப் பேச்சுக்களை பரவலாக கசிய விட்டபடி மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது நகைப்புக்கிடமான செயல் என்றும் அவ்வாறான புதிய முகங்களை எமது மக்கள் ழுழுமையாக நிராகரிக்க வேண்டுமென்றும் கொள்கையற்ற கூட்டங்களாக இப்போது களமிறங்கியிருக்கும் இந்த அரசியல் வாதிகள் எமது மக்கள் துன்ப துயரங்களில் மூழ்கியிருந்த போது எங்கே சென்றிருந்தார்கள்? என்பதை எமது மக்கள் அறிவார்கள் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
|
|
| | வடக்கு கிழக்கு புனரமைப்பில் இலங்கை காட்டும் ஆர்வத்தை இந்தியா வரவேற்பு. |
|
| | 09.03.2010 - செவ்வாய்க்கிழமை
இலங்கையின் வடக்கு கிழக்கு புனரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை காட்டும் ஆர்வத்தை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறாம் திகதி முதல் இலங்கையில் தங்கியிருந்த அவர் இந்தியா பயணமாவதற்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட செய்தியிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிப்பட்ட நிலையில் தேர்தல் நடத்துவதன் மூலம் இலங்கை மக்கள் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய அரசியல் ஏதுநிலை தோன்றும் என்பதுடன் வடக்கு கிழக்கு பிராந்திய புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் அதேவேளை அவற்றுக்கு இலங்கை வழங்கி வரும் ஆதரவை அவர் வரவேற்றதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக வடபிராந்தியத்தில் புகையிரத பாதை செயற்றிட்டத்திற்காக இந்தியாவினால் வழங்கப்படும் 425 மில்லியன் டொலர் கடனுதவி தொடர்பில் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ்விற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
|
|
|
| | மீள்குடியேறிய மக்களை கத்தோலிக்க ஆயர்கள் சந்தித்தனர். |
|
| | 09.03.2010 - செவ்வாய்க்கிழமை
வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை ஆறு கத்தோலிக்க ஆயர்கள் சந்தித்துள்ளனர்.
கிளிநொச்சி முழக்காவில் விடத்தல்தீவு இரணைமடு மற்றும் கிரான் ஆகிய இடங்களில் உள்ள மக்களை சந்தித்த ஆயர்கள் அம்மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளனர். இலங்கை ஆயர்கள் மாநாட்டின் தலைவர் வியன்னி பெர்னான்டோ யாழ்ப்பாண ஆயர் வணக்கத்துக்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை ஆகியோர் தலைமையிலான குழுவினரே இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | ஐ.நா.அரசியல்துறை பிரதிப் பொதுச் செயலாளர் இலங்கை வரவுள்ளார். |
|
| | 09.03.2010 - செவ்வாய்க்கிழமை
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் துறை பிரதிப் பொதுசெயலாளர் லின் பெஸ்கோ விரைவில் மீண்டும் இலங்கை வரவுள்ளார் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கை வரவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் பான் கீமூன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நியுயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இலங்கை குறித்து மேற்கொண்ட உரையிலேயே பொதுசெயலாளர் இவ்விடயம் குறித்து அறிவித்துள்ளார். இதன்போது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடிமர்த்தல் மற்றும் பொறுப்பு வாய்ந்த முறைமையொன்றை உருவாக்குதல் போன்ற விடயங்களில் இலங்கை மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த வியாழக்கிழமை தாம் மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடலின் போது நேரடியாகவும் நேர்மையாகவும் கருத்துக்களை பறிமாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ள அதேவேளை யுத்தம் நிறைவடைந்த பின்னர் தாம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது உயர்மட்ட அதிகாரிகள் பல விடயங்கள் குறித்து இணங்கப்பாட்டை எட்டியதாகவும் ஐக்கிய நாடுகள் பொதுசெயலாளர் பான் கீமூன் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர இலங்கை தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிப்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்திருப்பதாகவும் ஐ.நா.செயலாளர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.
|
|
|
| | சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் தொடருகின்றன. |
|
| | 09.03.2010 - செவ்வாய்க்கிழமை
சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சட்டவிரோத தேர்தல் சுவரொட்டி மற்றும் பதாதைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு தாம் தெளிவுப்படுத்தியுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நாட்டில் எந்த பகுதியிலும் இதுவரை சட்டவிரோத சுவரொட்டிகள் அகற்றப்படவில்லையென கபே அமைப்பின் இணைப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பில் பல பகுதிகளிலும் சட்டவிரோத பதாதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்தியநிலையத்தின் தேசிய இணைப்பாளர் டீ எம் திசாநாயக்கவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக விசேட சுற்றுநிருபம். |
|
| | 09.03.2010 - செவ்வாய்க்கிழமை
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கென அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்களில் பணிபுரிவதற்கென அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு விஷேட சுற்று நிருபம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அச்சுற்று நிருபத்தில் 800 வாக்காளர்களுக்கு குறைவாக உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு எட்டு அதிகாரிகளை நியமிக்கும் படி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல 800 தொடக்கம் 1200 வாக்காளர்களை கொண்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு ஒன்பது பேரை கொண்ட அதிகாரிகளின் குழுவை பணியில் அமர்த்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதினான்கு அதிகாரிகளை ஆயிரத்து 200 தொடக்கம் 1500 வரை வாக்காளர்களை கொண்ட வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1500 மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட மத்திய நிலையங்களில் சேவையாற்ற 15 அதிகாரிகளை கடமையில் ஈடுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
|
|
|
| | வவுனியா வடக்கில் இருபத்தைந்து பாடசாலைகள் மீள ஆரம்பம். |
|
| | 09.03.2010 - செவ்வாய்க்கிழமை
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள 73 பாடசாலைகளில் 25 பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு கல்விப் பணிப்பாளர் அன்டன் சோமராஜா தெரிவித்தார்.
ஆயுதவன்முறை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு இயங்காத நிலையில் காணப்பட்ட போதிலும் நலன்புரி நிலையங்களில் தற்காலிக வகுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. தற்போது வவுனியா வடக்கில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றமையினால் அந்த பாடசாலைகள் தமது சொந்த இடங்களில் இயங்குவதற்கான ஏற்பாடுகளை வவுனியா வடக்கு கல்வி வலயம் மேற்கொண்டது. இந்தநிலையில் இதுவரையில் 25 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் நெடுங்கேணி கோட்டத்திலேயே அதிகளவான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
|
|
|
| | ஹிஸ்புல்லாவின் அமைச்சுப் பதவிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் கையேற்றார். |
|
| | 09.03.2010 - செவ்வாய்க்கிழமை
கிழக்கு மாகாணத்தின் அமைச்சர் ஹிஸ்புல்லா வகித்த அமைச்சுப் பொறுப்பினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
அமைச்சர் ஹிஸ்புல்லா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தமது பதவியினை ராஜினாமாச் செய்துள்ள நிலையில் இன்று காலை 8.45 அளவில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் எட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம முன்னிலையிலேயே முதலமைச்சர் அவ்வமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த அமைச்சின் கீழ் சுகாதாரமும் சுதேச மருத்துவமும் சமூக சேவைகள் நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் மகளிர் அலுவல்கள் இளைஞர் அலுவல்கள் விளையாட்டுத் துறை தகவல் தொழிநுட்பக் கல்வி கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் உணவு வழங்கலும் விநியோகமும் ஆகிய துறைகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | ஊ.சே.நிதி மற்றும் ஊ.ந.நிதி என்பனவற்றின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. |
|
| | 09.03.2010 - செவ்வாய்க்கிழமை
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றை பெறுவதற்கான நடைமுறை மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் பயனாளிகள் ஓய்வுபெற்றதன் பின்னர் தமது வைப்புக்களை உடனடியாக பெறும் நோக்கில் தொழில் அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து புதிய நடைமுறையினை அமுல்படுத்தவுள்ளன. இதற்கமைய பொதுவான கணிணி தரவகம் ஒன்றினை ஸ்தாபிக்க இரு அமைப்புக்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்த தரவகத்தின் மூலம் முழுமைப்படுத்தியதும் மிகவும் சரியானதுமான உறுப்பினர்களின் தொகையினை இலகுவாக வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை அவர்கள் ஓய்வு பெற்று ஒருசில நாட்களுள் பெறக்கூடியதாக இருக்கும் எனவும் இதன்மூலம் வெளி மாவட்ட உறுப்பினர்கள் சிரமமின்றி தமது கொடுப்பனவுகளை பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
| | மேலுமொரு அகதிப் படகு அவுஸ்திரேலியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது. |
|
| | 09.03.2010 - செவ்வாய்க்கிழமை
சட்டவிரோத குடியேற்றவாசிகளான இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மற்றுமொரு படகு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த படகு அவுஸ்திரேலியாவின் வடமேற்கு அடேல் தீவுக்கு அருகில் 28 அகதிகளுடன் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று முன்தினம் 80 பேரை ஏற்றி சென்ற படகொன்றும் அந்த பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஜுலியா கில்லர்ட் மேற்படி படகிலிருந்த அனைவரும் மோதலின் பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறிய அகதிகள் என உறுதிப்படுத்தியுள்ளார். அந்த படகுகள் இரண்டும் தற்போது அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கிறிஸ்மஸ் தீவை தற்போது அங்குள்ள அகதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் விஸ்த்தரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
|